Saturday, April 7, 2012

கலெக்டர் சகாயம்

கலெக்டர் சகாயம்



இவரைப் பத்தி நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க !
மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் எப்படிப்பட்டவர் ?


‘‘மதுரை கலெக்டர் சகாயம், அதிமுக-வினர் போல் செயல்படுகிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று பேசும் அளவிற்கு சென்றுள்ளார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.’’

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை மாவட்ட ஆட்சியர் குறித்து அளித்துள்ள பத்திரிகை செய்தி இது. இதே சகாயம் குறித்து டெக்கான் கிரானிக்கில் மற்றும் ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் அளித்துள்ள விவரங்கள் என்ன?


‘‘என்னை கோயம்புத்தூருக்கு மாற்றியிருந்த நேரம். என் பெண் யாழினிக்கு அப்போது மூன்று வயது. திடீரென்று ஒருநாளிரவு அவள் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டாள். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றேன். உடனே மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிவிட்டார்கள். மாதக் கடைசி என்பதால் கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. புதிய ஊர். அறிமுகம் இல்லாத மனிதர்கள். எனக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கடன் கேட்கவும் சங்கடமாக இருந்தது. காஞ்சிபுரத்தில் நான் வேலை பார்த்தபோது எனக்கு நண்பராக இருந்த ஒரு பள்ளி ஆசிரியர் அப்போது கோவைக்கு மாற்றல் ஆகி வந்திருந்தார். அவரிடம் மிகவும் தயக்கத்துடன் நான்காயிரம் ரூபாய் கடன் கேட்கவும் ஓர் அரை மணி நேரத்தில் அவர் கொண்டு வந்து கொடுத்தார். உடனே குழந்தைக்கு சிகிச்சை ஆரம்பிச்சிட்டோம். ஆனால், சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்ததும்தான் என் மனமதில் இருந்த சுமை இறங்கியது.’’

சகாயம், ஐஏஎஸ். நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்ஐசி ஹவுசிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு. வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு என பகிரங்கமாகத் தனது சொத்துப்பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்துக்குக் கீழ் தலைநிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

‘‘நான் அந்த கோயம்பத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன் என்றால்,அப்போது என் கட்டுப்பாட்டில் 650 மதுபானக் கடைகள் இருந்தன. உரிமம் புதுப்பிக்க கடைக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் என்று கொடுக்கத் தயாராய் இருந்தார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அடுத்த ஐந்தாவது நிமிடம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில், மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசித்துப் பாருங்கள். ஆனால், அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்கிறதில் ஒரேயொரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரித்துக்கொண்டே போவார்கள். அவர்களை மட்டும் சமாளித்துவிட்டால் போதும். — தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் சொந்த ஊர். மற்றவர்கள் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று சொல்கிற அம்மா. நீ படித்து கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா என்று சொல்லிக்கொண்டே இருக்கும் அப்பா. கலெக்டர்தானே, ஆயிடுவோம்னு படிச்சேன், ஆயிட்டேன். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நம்ம மனது எந்த அளவுக்கு புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ, கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணினேன்.

‘‘காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரியவர், தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். மாதிரியை ஆய்வுக்கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பியதில், மனிதர்கள் குடிக்க இலாயக்கற்ற பானம் என்று அறிக்கை வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஓர் அறிக்கை தயாரித்தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வட்டாட்சியரிடம் எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்துட்டு, கம்பெனியைப் பூட்டி சீல் வைக்கப் போறோம். எல்லோரையும் வெளியே வரச் சொல்லுங்கன்னு சொன்னோம். அந்த மேலாளரைவிட என்கூட வந்த வட்டாட்சியர் ஆடிப்போயிட்டார். சார், ...பெரிய பிரச்சனை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு பதறினார். கலெக்டரைக் கேட்டால் சீல் வைக்க விடமாட்டார். சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்கன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவர், சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். முதல்வர் கிட்ட பேசுறதாச் சொல்றாங்க, சார். என்ன பண்ணலாம்னு கேட்டார். உள்ளே இருக்கிறவங்களை கைது பண்ணிட்டு சீல் வைக்க வேண்டியதுதான்னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி எட்டு பூட்டுகளையும் போட்டு சீல் வெச்சுட்டோம்.


நான் உடனே அலுவலகத்துக்குப் போகாமல், ஒரு குக்கிராமத்துக்குப் போய் ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரடரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்குப் போன் பண்ணி இருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போண் பண்ணினேன். யாரைக் கேட்டு சீல் வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தெரியுமா? என்று எல்லோரும் கேள்வி கேட்டாங்க. நான் என் கடமையைத்தான் சார் செய்தேன். மக்களுக்கு நல்லது செய்ததுக்காக, சஸ்பெண்ட் செய்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்விட்டேன். மறு நாள் இந்த செய்தி எந்தப் பத்திரிகையிலும் பெட்டி செய்தியாகக் கூட வரவில்லை. பெப்சிக்கு சீல் வைத்த சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை,.

இரண்டு நாள் கழித்து ஜூனியர் விகடன் இதழில் மட்டும் அந்தச் செய்தி விரிவாக வந்திருந்தது,. அதற்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல் வைத்த விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிந்தது.

" இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாற்றி மாற்றி பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலாக நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டுவிட்டோம். அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டோம். இன்னும் பத்தாண்டுகளில் அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வான்னு ஒவ்வொரு மாதமும் கலெக்டர் ஆபிசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் இரவு முழுதும் அந்தந்த கிராமங்களிலேயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்போதுதான் அவங்க சொல்வதற்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாம் உணர முடியும். "

இப்படிப்பட்ட சகாயம் மீதுதான் அமைச்சர் மு..அழகிரி குற்றம்சாட்டுகிறார்.

Saturday, March 10, 2012

ப்ளூம் பாக்ஸ்



அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர்

இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.


திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.



அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி